Skip to main content

பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்- இலவச பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பெண்கள்!

Oct 23, 2021 165 views Posted By : YarlSri TV
Image

பஸ் பயணிகளிடம் உரையாடிய மு.க.ஸ்டாலின்- இலவச பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பெண்கள்! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 



தினசரி முகாம்கள் நடந்தாலும் கூட, ஞாயிற்றுக்கிழமைகளில் கடந்த 5 வாரமாக மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதன்மூலம் தடுப்பூசி இலக்கை நெருங்க முடிவதால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.



இதனால் தமிழகம் முழுவதும் மெகா முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு வாரமும் 2 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.



காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வசதிக்கேற்ப சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.



வீடுகளுக்கு அருகே முகாம்கள் நடைபெறுவதால் எளிதாக சென்று மக்கள் தடுப்பூசியை செலுத்தி வந்தனர்.



இந்தநிலையில் அசைவ மற்றும் மது பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தடுப்பூசி போட முன்வராததால் மெகா சிறப்பு முகாம் சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மெகா சிறப்பு முகாம்கள் 50 ஆயிரம் இடங்களில் நடக்கிறது.

 



2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை இந்த சிறப்பு முகாம்கள் மூலம் பயன்பெற ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன.



இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் முதியவர்ளை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



தடுப்பூசி கையிருப்பு அதிகமாக உள்ளதால் அவற்றை விரைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சுகாதாரத்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.



சென்னையில் 1,600 முகாம்களில் தடுப்பூசி போட மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. வார்டுகளுக்கு 4 முகாம்கள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. நடமாடும் முகாம்களும் செயல்படுகின்றன.



மாநகராட்சி பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், தனியார் குடியிருப்பு இடங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் மெகா முகாம்கள் நடக்கின்றன.



முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரைப்பாக்கம் கண்ணகி நகரில் 5 இடங்களில் நடந்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்தார்.



அப்போது தியாகராயா நகரில் இருந்து கண்ணகி நகருக்கு மாநகர பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் மு.க.ஸ்டாலின் ஏறி அதில் பயணம் செய்த பெண்களிடம் இலவச பயணம் குறித்து விசாரித்தார்.



அரசு வழங்கும் இலவச பயணம் வசதியாக இருக்கிறதா? குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வருகிறதா? இருக்கைகள் வசதியாக உள்ளதா? என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் இலவச பயணம் எங்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்தனர்.



இந்த ஆய்வின்போது பொதுமக்கள் அவரிடம் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதை அவர் அன்போடு வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.



இந்த ஆய்வின்போது தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி, வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



சென்னை மாநகரில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் காலையிலேயே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.



ஒருசில இடங்களில் ஊழியர்கள் வீதி வீதியாக சென்று தடுப்பூசி போடாதவர்களை அழைத்து வந்தனர்.

 



இதேபோல புறநகர் பகுதியிலும் தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் இருந்தது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பல இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் ஆர்வத்துடன் தடுப்பூசி போட வந்தனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை