Skip to main content

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசின் பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன்

Jul 03, 2021 159 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசின் பாராட்டை தமிழகம் பெற்றுள்ளது - அமைச்சர் சுப்பிரமணியன் 

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சட்டமன்ற மதிப்பீட்டு குழு உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.



அதன் பின்னர் அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர நடவடிக்கையின் பேரில் தமிழகத்தில் உள்ள 1½ கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 6 லட்சத்து 41 ஆயிரம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.



ஜூலை மாதத்தில் மத்திய அரசு மூலம் 71 லட்சம் கொரோனா தடுப்பூசி பெற்று பொதுமக்களுக்கு செலுத்தப்படும். ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தலின்படியும், மத்திய அரசின் உத்தரவின் பேரிலும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது.



அதன்பேரில் இன்று காலை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் கர்ப்பிணிபெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமை சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தடுப்பூசி செலுத்தும்பணி இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டது தடுப்பூசி செலுத்தும் பணியில் ஒரு மைல் கல்லாக உள்ளது.



தமிழகம் முழுவதும் 18 வயது நிரம்பிய பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கொரோனா நோய்தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது.



தமிழகத்தில் தொற்று பரவல் குறைந்து வந்தாலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 ஆயிரத்து 782 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.



கடந்த 2 மாதமாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருந்துவந்தது உண்மைதான். ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தமிழக அரசு, மத்திய அரசின் பாராட்டை பெற்றுள்ளது.



இதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று பொதுமக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் கடந்த ஆண்டு அரசு கட்டணத்தை நிர்ணயிக்ககோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தார்.



இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண சம்மந்தப்பட்டதுறை அமைச்சர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை